சேலம்: ''ஓராண்டில் சாலை விதிகளை மீறிய, 3,436 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என, சேலம் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மாத ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:
சாலை சந்திப்பு, வளைவு, குறுகிய சாலை, போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் அதிவேகத்தால் விபத்துகள் நடக்கின்றன. எதிரெதிர் திசையில் வாகனங்கள் ஓட்டுவதாலும், உரிய, 'சைகை' இல்லாமல் வலது, இடது திசையில் வாகனங்களை திருப்புவதாலும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும் விபத்துகள் நேரிடுகின்றன.
கடந்த, 6 மாதங்களில் மாநகர் பகுதிகளில், 54 சதவீதம், ஊரக பகுதிகளில், 46 சதவீதம் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஓராண்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய, 3,436 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்க அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.பி., சிவக்குமார், டி.ஆர்.ஓ., மேனகா, துணை கமிஷனர்கள், உதவி கலெக்டர்கள், டி.எஸ்.பி., உதவி
கமிஷனர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.