சேலம்: நியமன குழு உறுப்பினர் பதவியில் இருந்து, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவியின் கணவரை நீக்கக்கோரி, 12 கவுன்சிலர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க., - காங்., - அ.தி.மு.க., என, 12 கவுன்சிலர்கள், நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் அளித்த மனு:
டவுன் பஞ்சாயத்து நியமன குழு உறுப்பினராக, 4வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ராஜா உள்ளார். அவரது மனைவி கவிதா தலைவராக உள்ளதால், அதிகார துஷ்பிரயோகம் செய்து, மூப்பு பணியாளர்களை இடமாற்றம் செய்தார். தற்போது துாய்மை பணியாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
டவுன் பஞ்சாயத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால் நியமன குழு உறுப்பினராக உள்ள ராஜாவை, அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 7வது வார்டு, தி.மு.க. கவுன்சிலர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் டவுன் பஞ்சாயத்தில், 18 கவுன்சிலர் உள்ளனர். அதில், தி.மு.க., 7, காங்., 2, அ.தி.மு.க., 3 என, 12 கவுன்சிலர், ராஜா மீது புகார் கொடுத்துள்ளோம். தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா, எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க, அவரது கணவர் ராஜா விடுவதில்லை. அவரே தலைவர் இருக்கையில் அமர்ந்து கவுன்சிலரிடம் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கிறார். 8 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் நடந்துள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் குறிப்பிட்ட, 3 வார்டுகளுக்கு, 4 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி திட்டப்பணி நடக்கிறது.
இதை எதிர்த்து கேட்டால், '27 ஆண்டாக, தி.மு.க., நகர செயலர் நான் தான். என் மனைவி தான் தலைவி. என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது' என்கிறார்.
இதனால் எங்கள் வார்டுகளில் பணிகள் நடக்கவிலலை. ஒரே கட்சியாக இருந்தும் எதற்காக இப்படி செயல்படுகிறார் என தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சர் நேருவிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.