சேலம்: நில வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் வரை உயர்த்தினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர் என, நிலத்தரகர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக நிலத்தரகர்கள் நல சங்க மகா சபை கூட்டம் சேலம், கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அதில், பத்திரப்பதிவு கட்டணத்தை, 4ல் இருந்து, 2 சதவீதமாக குறைத்த தமிழக அரசுக்கு நன்றி; 2012ம் ஆண்டு, 300 சதவீதம் வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. இது, 2017ல், 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
தற்போது நிலவழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் வரை உயர்த்துவதாக கூறப்படுகிறது.
இப்படி உயர்த்தினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
நிலத்தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்தல்; என்.எல்.சி., போன்ற நிறுவனங்களுக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அரசு வேலை வழங்குதல்; வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலத்தரகு தொழிலாளர்களுக்கு மாதம், 2,500 ரூபாய் அரசு வழங்குதல்; சங்க உறுப்பினராக உள்ள நிலத்தரகு தொழிலாளர்களை மட்டும் பத்திரப்பதிவின்போது சாட்சியிகளாக சேர்த்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் வரதராஜன், பொருளாளர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.