வீரபாண்டி: கவுன்சிலர் முன்னிலையில் டெண்டர் விட, வீரபாண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வீரபாண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் வருதராஜ் தலைமை வகித்தார். அதில், நகல் எடுத்தல், பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், தொலைபேசி கட்டணம் வழங்குதல் என, பிப்ரவரி மாத செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது இடைமறித்த, 11வது வார்டு, பா.ம.க., கவுன்சிலர் மணிவண்ணன், 'வார்டில் எந்த பணியும் நடப்பதில்லை' என குற்றம்சாட்டினார். அதற்கு, 'மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்ய, 97 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான டெண்டர் இறுதி செய்வதில் அரசியல் தலையீட்டால் இழுபறி நிலை நீடிக்கிறது. இதனால் உங்கள் வார்டு மட்டுமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்கவில்லை' என,
வருதராஜ் கூறினார்.
இதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஒன்றிய கமிஷனர் ராஜ கணேசன், 'மத்திய அரசின் நிதி, 97 லட்சம் ரூபாய்
தற்போது கிடைத்துள்ளது.
இதை பயன்படுத்தி வார்டு பகுதிகளில் பணிகள் செய்ய ஏதுவாக விரைவில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் முன்னிலையில் ஒரு மனதாக டெண்டர் விடப்பட்டால் எந்த அரசியல் குறுக்கீடு இல்லாமல் பணி செய்ய முடியும். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
கவுன்சிலர்கள் முன்னிலையில் டெண்டர் நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டதால், வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து கூட்டம் நிறைவடைந்தது. பி.டி.ஓ., மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.