ஓமலுார்: சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில் வணிகவியல் துறை சார்பில், 'இளம் தொழில்முனைவோர் வாய்ப்பு, சவால்' தலைப்பில் இரு நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. துறைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பெரியார் பல்கலை பதிவாளர் பாலகுருநாதன் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் பேசியதாவது: தொழில் முனைவோராக மாற நினைக்கும் இளைஞர்களுக்கு உதவ, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி பெற, மாவட்ட தொழில் மையம் வழிகாட்டுகிறது. அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வரையான கடனுதவியை, குறைந்தபட்சம், 8-ம் வகுப்பு படித்த,
45 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்றோருக்கு அளிக்கப்படுகிறது. இதில், 25 சதவீதம் மானியம் கிடைக்கும்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்கும். இத்தொழிலை கிராமத்தில் தொடங்கினால், 35 சதவீத மானியம் வழங்கப்படும். தமிழக அரசு சார்பில் புது தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டத்தில், 5 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், 25 சதவீதம் மானியம் கிடைக்கும். அனைத்து திட்டங்களுக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திருப்பூர் தொழிலதிபர் சிவசுப்ரமணியன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.