வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஆக்கிரமித்து கடைகள், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் நிலவுகிறது.
ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அதற்கேற்ப ஏராளமான பயணியர் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதன் நுழைவாயிலை ஆக்கிரமித்து, சிலர் குடைகளை வைத்து, எலுமிச்சை, மொபைல் 'சிம்' கார்டு, தின்பண்டம் உள்ளிட்டவற்றை விற்கின்றனர். மேலும், ஏ.டி.எம்., மையங்கள் உள்ளதால், அங்கு வருவோர் நிறுத்தி செல்லும் வாகனங்களாலும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, ஸ்டாண்டுக்குள் நுழைய, வெளியே வரும் பஸ்களை, திருப்ப முடியாமல் டிரைவர்கள்
சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.