பனமரத்துப்பட்டி: குறி சொல்லும், 'கோடாங்கி' வேடத்தில் வந்து சிறுமியிடம் வெள்ளி சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
மல்லுார், அம்பேத்கர் நகருக்கு நேற்று காலை, 9:30 மணிக்கு, குறி சொல்லும், 'கோடாங்கி' வேடத்தில் ஒருவர் வந்தார். அங்கு, 16 வயது சிறுமியிடம் குறி சொல்வது போல் பேசினார்.
அப்போது, 'இச்சிலையை கும்பிட்டால் நல்லது நடக்கும். சங்கிலியை கழற்றி சிலை மீது போட்டு விட்டு கண்ணை மூடி பிரார்த்தனை செய்து மறுபடியும் எடுத்து போட்டுக்கொள்' என கூறினார்.
சிறுமியும், வெள்ளி
சங்கிலியை கழற்றி சிலை மீது போட்டுவிட்டு கண்ணை மூடியபோது, சங்கிலியுடன் ஓட்டம் எடுத்தார். அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர், கோடாங்கியை சுற்றிவளைத்தனர். மல்லுார் போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோடாங்கி வேடத்தில் இருந்தவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, வேலம்பட்டியை சேர்ந்த பொன்னுவேல், 22. அவர் ஒவ்வொரு ஊராக சென்று இதுபோல் ஏமாற்றி வந்துள்ளார். அவர் மீது திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உண்டியல் உடைப்பு, கோவில் மணி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.