வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி தொடரும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி தொடர்பாக அமித்ஷா பேட்டி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பழனிசாமி அளித்த பதில்: பா.ஜ., கூட்டணியில் தான் அ.தி.மு.க., உள்ளது. இதனையே தான் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., - பாஜ., கூட்டணி தொடரும் என்றார்.
தொடர்ந்து பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ அனைத்து பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. அம்மா உணவகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. உணவு தரம் இல்லை. இதனை கூறினால் ஆதாரத்தை கேட்கின்றனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

விழுப்புரம் கடைவீதியில், கஞ்சா வெறியர்களின் ரகளையால், இப்ராஹிம் ராஜா என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: கஞ்சாவால் தொடர்ந்து கொலை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
‛ விழுப்புரத்தில் இப்ராஹிம் ராஜா என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக, கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சம்பவம் குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.