கோவை: கோவையில் நகை கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி, 43.5 லட்சம் ரூபாயை பறித்து தப்பிய ஆறு பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர். கோவை மதுக்கரையை அடுத்த க.க.சாவடியில் இருந்து நேற்று காலை இருவர் பைக்கில் வேலந்தாவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வீரப்பனூர் அருகே செல்லும்போது, பின்தொடர்ந்து பைக், காரில் வந்த கும்பல், இவர்களது பைக்கை வழிமறித்து நிறுத்தியது.
வாகனங்களில் இருந்து இறங்கிய கும்பல் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி, அவர்களிடம் இருந்த, 43.5 லட்சம் ரூபாயை பறித்து, கேரளா நோக்கி தப்பிச் சென்றது. பணத்தை பறிகொடுத்த இருவரும், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்தை டி.ஐ.ஜி., விஜயகுமார், எஸ்.பி., பத்ரிநாராயணன் பார்வையிட்டனர். வாளையார், வேலந்தாவளம் சோதனை சாவடிகளிலும் விசாரணை நடத்தினர். பேரூர் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
ஹவாலா பணம்?
போலீசார் கூறியதாவது: கேரள மாநிலம், பாலக்காடு, கூற்றநாடு பகுதியை சேர்ந்தவர் பரத். 50. தங்க நகை கடை வைத்துள்ளார். மேலும் ஆபரணங்கள் செய்து, மொத்தமாகவும் சப்ளை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் பரத், தன் சகோதரி மகன் ரோஹித்துடன், 600 கிராம் தங்க ஆபரணங்களுடன் பைக்கில், கோவை ராஜவீதியில் உள்ள மொத்த நகை வியாபாரி நந்தகணேஷ் வீட்டுக்கு வந்தார். நகைகளை கொடுத்து விட்டு, இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, 43.5 லட்சம் ரூபாய் பெற்று, தங்கள் உள்ளாடைகளில் மறைத்து கொண்டு, பாலக்காடு புறப்பட்டனர். அப்போது ஆறு பேர் கும்பலிடம் பணத்தை பறிகொடுத்தனர். புகார் கொடுக்க பரத் தாமதம் செய்துள்ளார். இதனால் இத்தொகை ஹவாலா முறையில் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.