ஓமலுார்: 'ஊராட்சிகளுக்கு மட்டும் எப்படி அதிக நிதி வழங்க ஒப்புதல் கொடுக்கிறீர்கள்' என, கேட்டு, ஓமலுார் ஒன்றிய குழு தலைவர், அதிகாரிகளிடம்
வாக்குவாதம் செய்தார்.
சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
தி.மு.க., கவுன்சிலர் கோபால்சாமி: உலக தண்ணீர் தினத்தில் முத்துநாயக்கன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
பி.டி.ஓ., சுந்தர்: கிராம சபை கூட்டம் நடத்த, 5,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் குப்புசாமி: முதல்வர் பிரிவுக்கு அனுப்பும் மனுக்கள் மீது பி.டி.ஓ.,க்கள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் திட்டப்பணிகளை ரத்து செய்து அனைவருக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும்.
சுந்தர்: உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
தலைவர் ராஜேந்திரன்: கவுன்சிலர்கள், பணிகளை மேற்கொள்ள தலா, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையெனில், நான் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தொடர் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவோம்.
பி.டிஓ., கருணாநிதி: தீர்மான நகல் வழங்கினால் மேலதிகாரிகளுக்கு அனுப்ப மட்டுமே முடியும். நீங்கள் தான் நிதியை கேட்டு பெறமுடியும்.
ராஜேந்திரன்: ஊராட்சிகளுக்கு மட்டும் எப்படி அதிக நிதி வழங்க
ஒப்புதல் கொடுக்கிறீர்கள்...?
இவ்வாறு கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பா.ம.க.,வைச் சேர்ந்த, ஒன்றிய குழு துணைத்தலைவி செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.