தஞ்சாவூர்: ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவன மோசடிக்கு உடந்தையாக இருந்த, மூன்று பேரை, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில், முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக கூறியதை நம்பி, பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை, முதலீட்டாளர்களுக்கு முறையாக லாபத்தில் பங்கு வழங்கப்பட்டுள்ளது. கமாலுதீன் இறந்த பின், முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.இது தொடர்பான புகார்படி, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், சகோதரர் அப்துல் கனி, நிறுவன மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதால், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
அதில், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளரான அய்யம்பேட்டையை சேர்ந்த முகமது சுபாந்தீரீயோ,56, முகமது ரபீக்,46, முகமது சாதீக்,57, ஆகிய மூன்று பேரையும், நேற்று முன்தினம், போலீசார் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.