பெரம்பலுார்: பெரம்பலுாரில், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை 'சிப்காட்' பகுதியை சேர்ந்தவர் ரவி, 58, பெரம்பலுார் மதன கோபால சுவாமி கோவில் எழுத்தர். 'கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலுான் கடை நடத்துவதற்கு, 5,000 ரூபாய் தர வேண்டும்' என, பெரம்பலுார் சிங்காரம், 45, என்பவரிடம், இவர் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சிங்காரம், பெரம்பலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று மாலை கோவிலுக்கு சென்ற சிங்காரம், போலீசார் கொடுத்த, 5,000 ரூபாயை, எழுத்தர் ரவியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவியை கையும் களவுமாக கைது செய்து, விசாரிக்கின்றனர்.