மயிலாடுதுறை: குத்தாலத்தில், திருமணமான 25 நாட்களில், கள்ளத் தொடர்பை கண்டித்த கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்தவர் சரவணன், 30, வியாபாரி. இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த தாட்சாயணி என்கிற நந்தினி, 25, என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 5ம் தேதி சரவணனை, தாட்சாயணி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர், 38, ஆகியோர் சேர்ந்து கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்து விட்டு தப்பினர்.இதுகுறித்து சரவணன் குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் படி, கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் தாட்சாயணி, ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருமணத்திற்கு முன்பே தாட்சாயணி - ராஜசேகர் இடையே தொடர்பு இருந்தது. பெற்றோர் வற்புறுத்தலால் சரவணனை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தாட்சாயணி, ராஜசேகருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதையறிந்த சரவணன் கண்டித்தார். ஆத்திரமடைந்த தாட்சாயணி, ராஜசேகருடன் சேர்ந்து சரவணன் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தாட்சாயணி, ராஜசேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.