வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 60 தொகுதிகளை கூட தாண்டி வெற்றிப்பெறாது என காங்கிரசை சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று (மார்ச் 29) வெளியானது. அதன்படி, மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, மே 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பா.ஜ., 150 இடங்களில் வெற்றி பெறும் என பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ‛நாங்கள் அவரை அழைக்கவும் இல்லை, எங்களுடன் சேரும்படி கேட்கவும் இல்லை. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க முடிவு செய்துவிட்டனர். நாங்கள் இங்கு ஆட்சி அமைப்போம்' என்றார்.
முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், ‛பா.ஜ., 60 தொகுதிகளை கூட தாண்டி வெற்றிப்பெறாது. எங்களுக்கு எந்தவொரு கட்சியிடம் இருந்தும் அச்சுறுத்தல் வரவில்லை. மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம்' என்றார்.