தஞ்சாவூர்:நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோவிலில், பங்குனிபிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், வஞ்சுலவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற கல் கருட தலமாக இந்தக் கோவில் போற்றப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று முன் தினம் துவங்கியது. கொடிமரத்தின் முன், உற்சவர் பெருமாள், தாயாருடன் எழுந்தருளினார்.
பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருட சின்னம் வரைந்த கொடி ஏற்றினர். ஏப்., 8 வரை, பல்வேறு வாகனங்களில், தாயார் - பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.
ஏப்., 1ம் தேதி மாலை, விழாவின் முக்கிய நிகழ்வான உள்பிரகார கல் கருட சேவையும், இரவு 9:30 மணிக்கு கல் கருட வாகனத்தில் பெருமாளும், அன்னப்பட்சி வாகனத்தில் வஞ்சுலவல்லித் தாயார் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஏப்., 6 அதிகாலை 6:00 மணிக்கு, தாயார் பெருமாளோடு கோ ரத புறப்பாடும், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறும்.
நாமக்கல் நரசிம்மர் சுவாமி
நாமக்கல் நரசிம்மர் சுவாமி திருத்தேர் பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று முன் தினம் துவங்கியது. ஏப்., 6ல் தேரோட்டம் நடக்கிறது.
ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட சாலிகிராம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
மலையின் மேற்குப் பகுதியில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் கோவில், மலையை குடைந்து குடவறை கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
மலையின் கிழக்குப் பகுதியில், ரங்கநாயகி தாயாரோடு ரங்கநாதர் கோவில், குடவறை கோவிலாக அமைந்துள்ளது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்தசயன நிலையில், ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஒரே கல்லால் உருவான மலையின் இருபுறமும், குடவறை கோவில்களை கொண்டு சிறப்பு பெற்ற தலமாக நாமக்கல் விளங்குகிறது.
கோட்டை பகுதியில் மலைக்கு மேற்கில், 18 அடி உயர ஆஞ்சநேயர், நாமக்கல் மலையையும், நரசிம்மரையும் வணங்கிய நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
புராண சிறப்பு பெற்ற இந்தக் கோவில்கள், கி.பி., 8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்த மூன்று கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி திருத்தேர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழா நேற்று முன் தினம் காலை, 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, 8:00 மணிக்கு நரசிம்மரும், ரங்கநாதரும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். காலை, 11:00 மணிக்கு குளக்கரை நாமகிரி தாயார் மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம், இரவு, 7:30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது.
ஏப்., 4ல், மாலை, 6:00 மணிக்கு நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில், சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதில், பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.
ஏப்., 6ல், காலை, 9:00 மணிக்கு நரசிம்ம சுவாமி தேர் வடம் பிடித்தல், மாலை, 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
பழநியில் பங்குனி உத்திர துவக்கம்
பழநி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன் தினம் துவங்கியது. காலை 10:55 மணிக்கு பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் திருக்கொடி ஏற்றப்பட்டது.
ஏப்., 4 வரை தினமும் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தந்தப் பல்லாக்கில் வீதி உலா நடைபெறும். ஆறாம் நாள் விழாவான ஏப். 3ம் தேதி மாலை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
பங்குனி உத்திர தினமான ஏப்., 4ம் தேதி மாலை 4:45 மணிக்கு திருத்தேரோட்டம், ஏப்., 7 இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு நடைபெறுகிறது.
நந்தியம் பெருமான் ஜெயந்தி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அந்தணர்குறிச்சியில், நந்தியம் பெருமான் ஜெயந்தி விழா கோலாகலமாக நேற்று முன் தினம் நடந்தது.
வேதங்கள், மேள தாளங்கள் முழங்க, ஏர் கலப்பையால், பெட்டியை மண்ணோடு சேர்த்து இழுக்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலையில், ஐயாறப்பர் கோவிலில், நந்தியம் பெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. நேற்று காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளினார்.
நந்தியம்பெருமான் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, தில்லை ஸ்தானம், கடுவெளி வழியாக, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலுார் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோவிலை சென்றடைந்தார்.
நேற்று இரவு நந்தியம் பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.