ஆண்டிபட்டி:'வைகை அணை நீர்மட்டம் குறைந்தாலும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் இல்லை' என, பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகளால் நீர் வரத்து கிடைக்கும். கடந்த ஆண்டு பெய்த மழையால் அக்டோபர் 22ல் வைகை அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் மார்ச் 12ல் நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
கோடையின் தாக்கத்தால் தற்போது நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் குறைந்த அளவு மட்டும் வைகை அணை வந்து சேர்கிறது.
நேற்று வைகை அணை நீர்மட்டம் 54.17 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி.
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு, 349 கன அடியாக உள்ளது. கடந்த 28ம் தேதி இரவு வைகை அணை பகுதியில் 30.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள், ''தற்போது, அணையின் நீர் இருப்பு ஏப்ரல், மே வரை குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருப்பதுடன், மே முதல் வாரத்தில் மதுரை சித்திரை திருவிழாவிற்கும் ஆற்றில் நீர் திறந்து பயன்படுத்த முடியும்,'' என்றனர்.
குண்டேரிப்பள்ளம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் அடுத்த, குன்றி மலையடிவாரத்தில், 42 அடி உயரத்தில், 1980ல் குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.
குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர், பத்துக்-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக, குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்து சேருகிறது.
அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
அணை நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனுார், விளாங்கோம்பை, கல்லுாத்து ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன் தினம் காலை, 6:00 மணி நிலவரப்படி, 151 கன அடி தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணையின் முழுகொள்ளளவான 42 அடியை எட்டியதால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில், 96 மி.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில், அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர்வரத்தான 151 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேறுகிறது.
இந்த உபரி நீர் கொங்கர்பாளையம், வாணிப்புத்துார் பகுதிகளில் உள்ள இரு தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலக்கிறது.