தஞ்சாவூர்:பாபநாசம் அருகே, பாட்டியை கொன்று பித்தளை குவளையில் மறைத்து வைத்த பேத்தியை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, பண்டாரவாடை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி செல்வமணி, 55. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சீனிவாசன் இறந்து விட்டார்.
அவர்களுக்கு, இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகின்றனர்.
செல்வமணியின் மகள் ராஜலட்சுமி, நேற்று முன்தினம் வீட்டிற்குச் சென்ற போது, வீட்டின் கதவு பூட்டி இருந்தது.
அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் செல்வமணி இறந்து கிடந்தார்.
இது குறித்து, வழக்கு பதிந்த பாபநாசம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், செல்வமணியின் மகள் கீதாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், பேத்தியான வீரசிங்கம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி, 28, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
வெளிநாட்டில் உள்ள செல்வமணியின் மகள் கீதா தாய்க்கு மாதந்தோறும் பணம் அனுப்பி உள்ளார். இதையறிந்த கீதாவின் மகளான ஜெயலட்சுமி, பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால், கடந்த 23ம் தேதி இரவு, பாட்டிக்கும், பேத்தி ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, பாட்டி செல்வமணியை கீழே தள்ளியுள்ளார்.
தொடர்ந்து, சேலையால்கழுத்தை நெரித்து கொலை செய்து, பித்தளை குவளைக்குள் அமுக்கி வைத்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, செல்வமணியின் பேத்தி ஜெயலட்சுமியை, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.