விழுப்புரம்:விழுப்புரத்தில் பெண்ணை தாக்கியதை தட்டிக்கேட்ட பல்பொருள் அங்காடி ஊழியரை, சகோதரர்கள் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராகிம்,45. விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தார். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று முன் தினம் மாலை பல்பொருள் அங்காடியில், நோன்புக் கஞ்சிக்கான பொருட்களை வாங்க இப்ராகிம் சென்றார்.
அப்போது, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து தாக்கினர்.
அதைக்கண்ட இப்ராகிம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த தீபக்,23 ஆகிய இருவரும் அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டனர்.
ஆத்திரமடைந்த வாலிபர்கள் இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தப்பியோட முயன்ற வாலிபர்களை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் வந்த போலீசார், இப்ராகிம், தீபக் ஆகிய இருவரையும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே இப்ராகிம் உயிரிழந்தார்.
இரண்டு வாலிபர்களிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் பெரிய காலனி ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த ராஜசேகர், 33, வல்லரசு, 24 ஆகியோர் என்பது தெரிந்தது.
ஞானசேகரனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதையறிந்த அவரது மகன்கள் ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் தங்களின் தந்தை மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அந்தப் பெண்ணை பெரிய காலனியில் ராஜசேகர், வல்லரசு பார்த்துள்ளனர். இருவரும் அந்த பெண்ணை திட்டி தாக்கியபோது, அருகிலிருந்த பல்பொருள் அங்காடியில் பதுங்கியுள்ளார்.
பல்பொருள் அங்காடியில் புகுந்து அந்த பெண்ணை ராஜசேகர், வல்லரசு ஆகியோர் தாக்கினார். அதை இப்ராகிம்தடுத்தபோது கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை நடந்த இடத்துக்கு வந்த விழுப்புரம்எஸ்.பி., ஸ்ரீநாதா விசாரணை நடத்தினார்.