ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன், மாமியாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன், 33. தனியார் தொழிற்சாலை ஊழியர்.
இவரது மனைவி லோகப்பிரியா, 23, எட்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 27ம் தேதி லோகப்பிரியா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் கோகுல கண்ணன் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தன் மகள் லோகப்பிரியா இறப்பில், பெற்றோருக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வரதட்சணை காரணமாக கோகுல கண்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி, 61, இருவரும் சேர்ந்து லோகப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை தொங்க விட்டு துாக்கில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து கோகுல கண்ணன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.