இனி வரும் தேர்தல்களில், பா.ஜ.,வோடு தான் அ.தி.மு.க., கூட்டணி என்பதை, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, லோக்சபா தேர்தலில் இரு கட்சிகள் கூட்டணி உறுதியாகி உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல், 2021 சட்டசபை பொதுத் தேர்தல் ஆகியவற்றில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம்பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் பங்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பா.ஜ., தனித்து போட்டியிட்டது.
எனினும், கூட்டணி தொடர்வதாக, இரு கட்சித் தலைவர்களும் அவ்வப்போது அறிவித்து வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க.,வில் உள்கட்சி மோதல் ஏற்பட்டு, பழனி சாமியும், பன்னீர்செல்வமும் இரு அணிகளாக பிரிந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இருவரும் பா.ஜ., ஆதரவை கோரியதால், கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.
பின், பா.ஜ., மேற்கொண்ட முயற்சி காரணமாக, பன்னீர்செல்வம் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, பழனிசாமி தரப்புக்கு, பா.ஜ., ஆதரவு அளித்தது. ஆனாலும், இடைத்தேர்தல் பிரசாரத்தை இணக்கமின்றியே இரு தரப்பும் மேற்கொண்டன.
தேர்தலுக்கு பின், பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் உட்பட பல்வேறு பா.ஜ., பிரமுகர்கள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். பழனிசாமி விரித்த வலையில் இவர்கள் விழுந்ததால், இரு கட்சிகள் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டது; வார்த்தை போரும் துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் பா.ஜ., தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, அவர் பகிரங்கமாக பேசவும் செய்தார்.
இதனால் கூட்டணி உறவு கேள்விக்குறியாகி இருந்த நிலையில், அண்ணாமலை டில்லி சென்று, பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வில் காட்சிகள் மாறின. கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., - பா.ஜ., மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று முன்தினம் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழகத்தில் அ.தி.மு.க., உடனான பா.ஜ., கூட்டணி தொடர்கிறது' என அறிவித்தார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், ''பா.ஜ.,வோடு தான் கூட்டணி,'' என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''பா.ஜ., கூட்டணியில் தான் அ.தி.மு.க., உள்ளது என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இருந்தது. லோக்சபா தேர்தலுக்கு கூட்டணியாக பயணம் செய்து வருகிறோம்,'' என்றார். - நமது நிருபர் -