சென்னை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கவுள்ளது.
'இந்தியாவில் சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லுதல்;- சமூக நீதி முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற தலைப்பில் நடக்கும் இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி மூத்த தலைவர் கேசவ ராவ், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட 20 தலைவர்கள், நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும் பங்கேற்கின்றனர்.
![]()
|
காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுவரை பா.ஜ.,வுக்கு எதிரான அணியில் இணையாத, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், பிஜு ஜனதா தளத்திலிருந்து சஸ்மித் பாத்ரா, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசிலிருந்து சுரேஷ் ஆகியோரும், இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வி.சி., - எம்.பி., ரவிகுமார் கூறுகையில், ''பா.ஜ., ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக நீதியை முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்,'' என்றார்.
***