வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஆர்.ராஜன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து, ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், புதுடில்லியில் சமீபத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பேசிய காங்., பொதுச்செயலர் பிரியங்கா, 'ஜனநாயகத்தை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். என் சகோதரர் ராகுல், தியாகியின் மகன். அவரை துரோகி எனக்கூறி, பா.ஜ., தலைவர்கள் பலர், எங்கள் குடும்பத்தையும், எங்கள் தாயையும் பலமுறை அவமதித்து பேசியுள்ளனர். அவர்கள் மீது நாங்கள் வழக்கு போடவில்லையே? ராகுலை சிறையில் தள்ளி ஒடுக்க நினைக்கின்றனர். அவர் அதற்கு பயப்பட மாட்டார்' என்று அறை கூவி இருக்கிறார்.
நாமும் இயன்றவரை மூளையைக் கசக்கி, மண்டையை குடைந்து குடைந்து சிந்தித்துப் பார்த்தோம்... ராகுலின் தந்தை ராஜிவ், என்ன தியாகம் செய்திருக்கிறார் என, நம் சிற்றறிவுக்கு எட்டவே இல்லை.
ராஜிவ் படுகொலை செய்யப்பட்டது தான் தியாகம் என்றால், மகாத்மா காந்தி கூட படுகொலை தான் செய்யப்பட்டார். அவரின் வாரிசுகள் யாராவது அரசியலுக்கு வந்தனரா... நேருவும், இன்ன பிற காங்கிரஸ் தலைவர்களும், காந்தியின் வாரிசுகளை ஏன் அரசியலுக்கு அழைத்து வரவில்லை?
'ஜனநாயகத்தை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளோம்' என்றும் கூவி இருக்கிறார், பிரியங்கா. ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்களும், உங்கள் சகோதரரும் சிரமப்பட தேவையில்லை; அந்த ஜனநாயகம் தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளும்.

என்னமோ தியாகம் தியாகம் என்கிறீர்களே... உங்கள் தாயும், உங்கள் சகோதரரும் மோசடியாக கபளீகரம் செய்துள்ள, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை, மத்திய அரசிடம் ஒப்படைத்து தியாகம் செய்யத் தயாரா?
இல்லை... உங்களை மணந்ததால் கிடைத்த செல்வாக்கால், உங்களின் கணவர் ராபர்ட் வதேரா, சகாய விலைக்கு சுவாதீனப்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, நிபந்தனையின்றி மத்திய அரசிடம் ஒப்படைத்து தியாகம் செய்யத் தயாரா?
அண்ணனும், தங்கையும் தியாகம் செய்கின்றனராம்... தியாகம்!
நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், உங்கள் பரம்பரையும், இதுவரை நாட்டுக்காக செய்த தியாகங்கள் போதும். உண்மையிலேயே உங்கள் குடும்பத்திற்கு, இந்த நாட்டின் மீது மரியாதை இருக்குமானால், அமைதியாக இருந்தாலே போதுமானது.
இல்லை... 'தியாகம் செய்கிறோம்... தியாகம் செய்கிறோம்...' என்று கதையளந்தால், என்னென்ன தியாகங்கள் செய்தீர்கள்... என்ன தியாகங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று விலாவாரியாக, விபரமாக ஒரு பட்டியல் தாருங்கள் பிரியங்கா!