வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், எம்.பி., பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், வெளிநாடுகளின் தலையீட்டை தேவையில்லாமல் இழுப்பதாக, காங்கிரசை பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அவதுாறு வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கவனித்து வருவதாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்தது. மேலும், அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ரிச்சர்ட் வால்கரும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்களை இணைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், தன் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அதில், 'இந்தியாவில் நடக்கும் ஜனநாயகப் படுகொலையை ஜெர்மனி கவனித்து வருவதற்கு நன்றி' என குறிப்பிட்டுஇருந்தார்.
இதற்கு, பா.ஜ., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பியுஷ் கோயல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும், திக்விஜய் சிங் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டு உள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: ராகுலுக்கு நீதிமன்றம் தான் தண்டனை விதித்து உள்ளது. இதை, அவர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவில்லை. மாறாக நம் நாட்டு விவகாரத்தில், வெளிநாடுகள் தலையிடுவதை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது.
நம் நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம். நம் நீதித்துறையின் சுதந்திரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் சார்பிலும் அதன் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
'அதானி குறித்து கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. ஆனால், பா.ஜ., தலைவர்கள் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்' என, இந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றிருந்தார். அப்போது, இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும் என பேசினார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், பார்லிமென்டில் ஆளும் பா.ஜ., தொடர்ந்து கோஷமிட்டு வருகிறது. இந்நிலையில், திக்விஜய் சிங்கின் சமூக வலைதளப் பதிவு, புதிய சர்ச்சையை உருவாக்கிஉள்ளது.