வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: திருச்சியில், 68 கி.மீ.,க்கு, மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவங்குவதற்கு ஆய்வு நடத்தி, மாநகராட்சியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையை போல், திருச்சியிலும் மக்கள் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவங்கப்பட உள்ளது. திருச்சியில், மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவங்குவதற்கான ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை, திருச்சி மாநகராட்சியில், நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
* சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தில்லை நகர் வழியாக வயலுார் வரை 18.7 கி.மீ.,க்கு ஒரு வழித்தடம்
* திருச்சி ஜங்ஷன் முதல், பஞ்சப்பூர், விமான நிலையம் வழியாக, புதுக்கோட்டை சாலையில் உள்ள சுற்றுச்சாலை சந்திப்பு வரை 23.3 கி.மீ., துாரத்துக்கு ஒரு வழித்தடம்

* துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை வழியாக, பஞ்சப்பூர் வரை 26 கி.மீ.,க்கு ஒரு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில், 68 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
திருச்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு துவங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கான அறிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசு வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பி, இந்த ரயில் சேவை திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்,
'தற்போது, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து, உயர்மட்ட பாலங்கள் கட்டும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் தெரிவித்து உள்ளார்.