திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் வீரஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மார்ச் 24ல் துவங்கிய ராம நவமி விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை சாதுக்கள், பக்தர்கள் பங்கேற்ற ராம நாம ஜபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்கக் கவசம் சாத்துப்படியானது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் அருள்பாலித்தார்.
கூடல்மலைத்தெரு சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வடைமாலை சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளிய ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்
ஜெனக நாராயண பெருமாள் கோயில் மண்டபத்தில் உற்ஸவர்களான ராமர், சீதா தேவி, லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் நம்மாழ்வார், ராமானுஜர், ஞானதேசிகருக்கு காட்சி தரும் வகையில் தரிசனங்கள் நடந்தது. அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் ராமர் ஜெனனம் நடந்தது. நவகலச பூஜைகள் செய்து, யாக வேள்வி நடத்தினர். ராமர், லெட்சுமணர், சீதா தேவியுடன் ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளிதரன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.