வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மாற்றுத்திறனாளியின் வாகன பதிவிற்கு வரிவிலக்கு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அங்கப்பன் தாக்கல் செய்த மனு:
நான் கை, கால்கள் இயக்கம் குறைபாடுடைய (லோகோமோட்டர்) மாற்றுத்திறனாளி. 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என மதிப்பீடு செய்து மத்திய அரசு சான்று வழங்கியது. வணிகவியல் பட்டம் பெற்று, பட்டயக் கணக்காளர் படிப்பைத் தொடர்கிறேன். சர்வதேச செஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளேன். அப்போட்டியில் நடுவராக தொடர்கிறேன்.என்னால் தனியாக இயங்க முடியவில்லை.
எனது தந்தைதான் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். நான் பயணம் செய்யும் போது உடலை துாக்கி அவர்தான் இருக்கையில் அமர வைக்க வேண்டும். தந்தைக்கு வயதாகிவிட்டது. அவரால் முன்புபோல் என்னை துாக்கி அமர வைக்க முடியவில்லை. ஒரு கார் வாங்கினேன். அதை எனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மாற்றம் செய்தேன்.

இதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் சான்று பெற்றேன். காரில் இருக்கையை மாற்றியமைத்ததன் மூலம் பிறர் உதவியின்றி என்னால் எளிதில் ஏறி, இறங்க முடியும்.மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க 1976 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வாகனத்தை பதிவு செய்து, வரிவிலக்கு அளிக்கக்கோரி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்தேன். மாற்றுத்திறனாளி சான்று, ஆர்.சி.,புத்தகம், வாகனத்தை மாற்றியமைத்ததற்குரிய சான்று சமர்ப்பித்தேன். நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து வரிவிலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அங்கப்பன் குறிப்பிட்டார்.
நீதிபதி பி.டி.ஆஷா: அரசாணையின் நோக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முற்றிலும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் மற்றும் முழு பங்கேற்பு) சட்டத்தின் நோக்கம் அவர்களை முக்கிய நீரோட்டத்தில் ஒருங்கிணைத்து மேலும் இயங்க வைப்பதே. அவர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக அரசாணையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிதான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என அதில் குறிப்பிடவில்லை. அவரது பயன்பாட்டிற்கு வாகனம் வைத்திருந்தால் போதுமானது.
இது மிக துரதிர்ஷ்டவசமான வழக்கு. அரசாணைப்படி தனக்குரிய சலுகையை பெற இந்நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் மனுதாரர் உள்ளார். அரசாணைப்படி மனுதாரருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.