வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஆபாசப் பட நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் அளித்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் (76 வயது), ஆபாசப் பட நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயம், 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை மறைப்பதற்காக நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து டிரம்ப் 1.30 லட்சம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அந்த நடிகை வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் அல்லது முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது இதுவே முதல் முறை. டிரம்ப் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தற்போது புளோரிடா மாகாணத்தில் இருக்கும் டிரம்ப், விசாரணைக்காக நியூயார்க் வரும்போது அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக டிரம்ப் கூறிய நிலையில் இந்த நடவடிக்கை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.