வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஏப்.,3 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரி எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நிராகரித்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று(மார்ச் 31) விசாரணைக்கு வந்தது.
பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை விதிகளுக்கு எதிரானது. கட்சியில் இருந்து நீக்காமல் இருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு இருப்பேன். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார். என்னை நீக்கியது தவறென்றால், அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும். இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில், வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
பழனிசாமி தரப்பு ஆஜரான வழக்கறிஞர், அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. அதை கருத்தில் கொண்டு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. கட்சியில் உள்ள 95 சதவீதம் பேர் பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர். அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமையை கலைத்த தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், இரு பதவிகளும் இல்லை. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், வழக்கு முடியும் வரை காத்திருக்க முடியாது. நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? எனக்கேள்வி எழுப்பினர். இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து, இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்., 3 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.