வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், 66, பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக வங்கி தலைவர் பதவியிலிருந்து முன் கூட்டியே விலக உள்ளேன் என அறிவித்தார். அதன்படி வரும் ஜூன் மாதமே அவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
இந்நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஆலோசித்தார். அதில், சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதி புதன்கிழமையுடன் (மார்ச் 29) முடிவடைந்துவிட்டது. இதுவரை உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் அஜய் பங்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.