தஞ்சாவூர்: மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட 45 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இந்த நிலையில், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இதில் கர்நாடகா 2வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழக அரசு விண்ணப்பம் செய்துள்ளது.
இது தொடர்பாக, உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக தலைவருமான சஞ்சய்காந்தி, தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பொருட்களுகான புவிசார் குறியீடு சட்டம் 2003ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு, 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கும், தஞ்சாவூரில் 10 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த 11 பொருட்களுக்கான புவிசார் குறியீடுகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன. இவற்றில் ஊட்டி வர்க்கி தவிர மற்ற 10 பொருட்களும் எனது மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த 11 பொருட்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசிதழில் கடந்த 2022, நவம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிடப்பட்ட நான்கு மாதங்களுக்குள் யாரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாவிட்டால், அப்பொருள்கள் புவிசார் குறியீடு பதிவு பெறுவதற்கு உறுதி செய்யப்படும். அப்படியாக விண்ணப்பிக்கப்பட்டு இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத சூழலில், 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.