தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடல் பகுதியில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து படகுகளில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக, கிடைத்த ரகசிய தகவலின்படி, தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., அய்யனார் தலைமையில், நுண்ணறிவு போலீசார் இளையராஜா, வனத்துறை அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர், ரோந்து சென்று அப்பகுதியில் இருந்த, மீனவர்களின் படகுகளை சோதனை செய்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த படகில் 11 பிளாஸ்டிக் வாளிகளில், 150 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. விசாரணையில், தேவிபட்டினம் லோகநாதன் மகன் பாலமுருகன் என்ற குணா 32, கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகளை பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த தேவிபட்டினம் போலீசார், பாலமுருகன் என்ற குணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.