வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆவின் தயிர் பாக்கெட்டில் ‛தஹி' என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதே ஆவின் தயாரிப்புகளில் ஏற்கனவே ஹிந்தி வார்த்தைகள் புழக்கத்தில் இருப்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் மற்றும் கர்நாடக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான நந்தினி ஆகியவை தயாரிக்கும் தயிர் பாக்கெட்களில், ‛தஹி' என ஹிந்தியில் குறிப்பிடும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவு வெளியிட்டது. ‛இது போன்ற ஹிந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்து, ‛தயிர் பாக்கெட்களில் ‛கர்ட்' என ஆங்கிலத்திலும் அதன் அருகே தயிர் என தமிழிலும் அச்சிடலாம்' என குறிப்பிடப்பட்டது.
தயிர் பாக்கெட்டில் ஹிந்தி மொழியை புகுத்துவதாக முதல்வர் தரப்பில் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆவினில் இதுவரை ஹிந்தி வார்த்தைகளே பயன்படுத்தப்படாதது போல இங்குள்ள சில கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. ஆனால் அதே ஆவினில் ஹிந்தி வார்த்தைகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உதாரணமாக முந்திரி பருப்பில் செய்யப்படும் இனிப்பு வகையான ‛காஜூ கட்லி' என்பது ஹிந்தி வார்த்தை. இந்த இனிப்பே வட இந்தியாவில் இருந்து வந்ததாகும். அந்த ஹிந்தி வார்த்தையை ஆவின் அப்படியே பயன்படுத்துகிறது. அதற்கு முந்திரி இனிப்பு என பெயர் வைக்க வேண்டியது தானே!

லஸ்ஸி, குல்பி, மில்க் பேடா போன்ற ஹிந்தி வார்த்தைகள் அடங்கிய ஆவின் தயாரிப்புகளுக்கு இனிப்பு தயிர், குச்சி ஐஸ், பால் இனிப்பு போன்ற பெயர்களை வைத்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆவின் மட்டுமல்ல கோ-ஆப்டெக்ஸ் முதல் காதி வரை அரசின் தயாரிப்புகள் பலவற்றில் ஹிந்தி சொல் இடம்பெற்றுள்ளன. அப்படியிருக்கையில், அரசு சார்ந்த தயாரிப்புகளில் முதலில் தமிழ் வார்த்தையும், அடுத்ததாக ஆங்கில வார்த்தையும் அதனை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் அச்சிடலாம் என்றும், அரசு தயாரிப்புகளில் ஹிந்தி வார்த்தை இருக்கும்போதே அம்மொழியை எதிர்ப்பது போல் செயல்படும் முதல்வர், தன் நேரத்தை வீணடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.