இன்று பெரும்பாலான வளரும் நாடுகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கார்பன் புகையைத் தவிர்க்க அந்தந்த நாட்டு அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக 'கோ கிரீன்' புரட்சியும் ஆங்காங்கே நடைபெறுகிறது. லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய பெருநகரங்களில் வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகை காரணமாக அளவுக்கதிகமாக காற்று மாசு ஏற்படுகிறது. எனவே இன்று உலகின் பல நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அறிமுகமாகிவிட்டன. காற்று மாசுவைக் குறைக்கும் நோக்கில் பிரிட்டன் அரசு ஹைப்ரிட் வாகனங்களைப் பரிந்துரைக்கிறது.
ஹைப்ரிட் நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரி எஞ்சின் இரண்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். இதனால், நகரில் மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும் இடங்களில் கேப் ஓட்டுநர்கள், தங்களது வாகன பேட்டரிக்களை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் மூலம் கார் ஓடும். மின்சார பேட்டரி ரீசார்ஜ் ஸ்டேஷன்கள் இல்லா இடங்களில் வழக்கமான பெட்ரோல் பங்க்குகள் இருக்கும். இங்கு வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்.
![]()
|
இவ்வாறாக லண்டன் கேப் ஓட்டுநர்கள் ஹைப்ரிட் வாகனங்கள் பயன்படுத்தி வந்தால், நாளடைவில் காற்று மாசுவைத் தடுக்கலாம் என பிரிட்டன் அரசு கணித்தது. ஆனால் சமீபத்திய பிரிட்டன் மத்திய பட்ஜெட்டில் மின்சாரக் கட்டணம் தாறுமாறாக எகிறியது. இதனால் கேப் ஓட்டுநர்களால் அதிக விலை கொடுத்து பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியவில்லை. மேலும் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு பேட்டரி ரீசார்ஜ் செய்ய கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கியூவில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களது தொழில் மற்றும் வருமானம் பாதிப்படைகிறது. எனவே பிரிட்டன் அரசு அதிகரிக்கும் மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென பிளாக் கேப் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![]()
|
தற்போது பிரிட்டனில் மின்கட்டணம் அதிகரிப்பதால் ஓட்டுநர்கள் வேறு வழியின்றி கேப்-களுக்கு பெட்ரோல் போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெட்ரோல் பங்குகள் உள்ள நிலையில் பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்பன் புகையை கட்டுப்படுத்த மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பது காலத்தின் கட்டாயங்களுள் ஒன்று. ஆனால் இந்த மாற்றம் உடனடியாக நடப்பது சாத்தியமன்று. இதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.