காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
விழாவின், 10ம் நாள் உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஏப்., 4ல் இரவு நடக்கிறது. ஏப்., 5ல் அதிகாலை தங்க இடபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.
பங்குனி உத்திர விழாவில், பங்கேற்க தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் குழுவாகவும்,தனியாகவும் வந்து தங்கியுள்ளனர்.
கோவிலுக்கு வரும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், பெரியவர்கள் பொழுதுபோக்கும் விதமாக கோவில் வளாகத்தில் ராட்சத ராட்டிணம், ரங்க ராட்டிணம், தலை கீழாக சுற்றும் ராட்டிணம் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.