காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், மலையாள தெருவில், உள்ள வீடுகளின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது. அப்பகுதிவாசிகள், 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோக தேவைக்கு கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் மற்றும் கூடுதல் குடிநீர் தேவைக்கு சிறு மின்விசைக் குழாயும் அமைத்துக்கொடுத்ததால், இத்தெரு மக்கள் கிணற்று நீரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்துவதில்லை.
இதனால், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த கிணறு பாழடைந்து, குப்பை கொட்டும் தொட்டியாக மாறியுள்ளது. சாலையோரத்தில் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக,கிணறு திறந்து கிடப்பதால், இவ்வழியாக செல்லும் சிறுவர்கள்,விளையாட்டுத்தனமான கிணற்றை எட்டி பார்க்கும்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, பயன்பாடின்றி உள்ள பாழடைந்த கிணற்றை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.