வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை சாலையில் இருந்து, பரந்துார் கிராமம் வரையில், 8.5 கி.மீ.,துாரம் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும், நிழல் தரும் மரங்கள் அறவே இல்லை என, பசுமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, பொன்னேரிக்கரை - பரந்துார் சாலை இரு புறமும் மரக்கன்றுகள் நடுவதற்கு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மரக்கன்றுகள் நடும் பணியை, தொழிலாளர்கள் துவக்கியுள்ளனர்.
முதற்கட்டமாக, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல் பொடவூர் கிராமம் வரையில், சாலை ஓரம் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த செடிகளுக்கு ஏற்ப, மூங்கில் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளன.
விரைவில், பரந்துார்- - - பொன்னேரிக்கரை வரை இருபுறமும், சாலை ஓர மரங்கள் நடும் பணி நிறைவு செய்யப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.