உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டா கிராமம். பட்டா அடுத்துள்ள சிறுதாமூர் பகுதியில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பட்டா கிராமம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றிச் செல்கின்றன. இதனால், இந்த சாலையில் பட்டா கிராமத்தின் முகப்பு பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
சாலையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான அப்பள்ளங்களை துார்த்து சமப்படுத்திட தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர் நிர்வாகத்தினர் சாலை பள்ளத்தில் ஜல்லிக் கற்கள் கொட்டி உள்ளனர்.
ஜல்லி கற்கள் கொட்டியதையடுத்து தார் போட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் சக்கரம் ஜல்லியில் பொதிந்து சிரமத்திற்குள்ளாகின்றனர்.
வேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் இயக்கப்படும் இச்சாலையில், பள்ளத்தை சரி செய்ய ஜல்லி கற்கள் குவித்திருப்பது இருசக்கர வாகன ஓட்டிகளை மிகவும் பாதித்துள்ளது.
எனவே, இச்சாலையில் கொட்டியுள்ள ஜல்லிக் கற்கள் மீது தார் ஊற்றி சீரமைக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.