கராச்சி, பாகிஸ்தானில் ரம்ஜான் நோன்பிற்கான இலவச உணவுப் பொருட்கள் வினியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இஸ்லாமியர்களின் புனித பண்டிகை ரம்ஜானுக்கான நோன்பு துவங்கிய நிலையில், இங்குள்ள உணவுப்பொருள் வினியோக மையங்களில் கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கராச்சியில் உள்ள பொது வினியோக மையத்தில் இலவச உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன.
அப்போது, வரிசையில் நின்றிருந்த இருவர், எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்து இறந்தனர்.
இதில் அதிர்ச்சியும், பீதியும் அடைந்த மற்றவர்கள் சிதறி ஓடி, அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில், பஞ்சாப் மாகாணத்தில் இலவச கோதுமை மாவு பெறுவதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிக்கி, 11 பேர் பலியான நிலையில், தற்போது கராச்சி நகரில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.