புதுடில்லி, வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் நம் நாட்டில் பதிவு பெற்று சட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்திருக்கும் முடிவுக்கு, இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும் இந்திய பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்து, இங்கு சட்டப்பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
![]()
|
ஆனால், இங்குள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது பிற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளின் முன் ஆஜராக அனுமதி அளிக்கப்படவில்லை.
கூட்டு வர்த்தகம், நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்தங்களின் வரைவு மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் போன்ற பரிவர்த்தனைகள், 'கார்ப்பரேட்' எனப்படும், பெரு நிறுவனங்களின் வேலைகளில் ஆலோசகராக பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால், உள்நாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில், இந்திய பார் கவுன்சில் பல சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.
இந்த முடிவுக்கு, இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் கேள்விகள் அடங்கிய விரிவான மனுவை, இந்திய பார் கவுன்சிலிடம் நேற்று முன் தினம் அளித்தது.
இது தொடர்பாக, இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம் நாட்டில் சட்ட பணிகளை மேற்கொள்ள வகுக்கப்பட்ட விதிகளில் பல்வேறு பாரபட்சங்கள் உள்ளன.
இது, மாநில பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே சட்ட பணிகளை மேற்கொள்ள தகுதி பெறுவர் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது.
வழக்கு அல்லாத பல்வேறு சர்வதேச சட்ட சிக்கல்கள், சர்வதேச நடுவர் மன்றங்கள் குறித்து சட்ட பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவது, உள்நாட்டு சட்டத்துறையை வளர்ப்பதுடன், இங்குள்ள வழக்கறிஞர்களுக்கும் பலன் அளிக்கும் என, பார் கவுன்சிலின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் உள்ள நடத்தை விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உள்நாட்டு வழக்கறிஞர்கள் கட்டுப்படுவர்.
அதேநேரம், வெளிநாட்டு வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும் அவர்கள் நாட்டு விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது.
நம் நாட்டு சட்டப் பணிகளுக்கும், வெளிநாட்டு சட்டப் பணிகளுக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசங்கள் உள்ளன. நம் நாட்டு சட்ட விதிகள் மிக பழைமையான நடைமுறைகளை பின்பற்றி உள்ளது.
சட்ட நிறுவனங்கள் என்ற கருத்தியலையோ, அந்த நிறுவனங்கள் தங்களை சந்தைப்படுத்திக் கொள்வதையோ நம் விதிமுறைகள் அனுமதிக்காது.
மேலும், வழக்கு வெற்றிக்கான கட்டணம், எதிர்பாராத கட்டணங்கள் விதிப்பது நம் விதிகளில் இல்லை. இவை, வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தாது.
எனவே, வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பின், இங்கு வெளிநாட்டு வழக்கறிஞர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரும்.
மேலும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இங்கு பதிவு பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் தெளிவற்றதாக உள்ளன. அவர்களின் நற்சான்றுகள் சுயமாக அளிக்கப்படுவதால், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
அடுத்தகட்டமாக வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில், உள்நாட்டு வழக்கறிஞர்களுக்கான வாய்ப்புகளில் சம நிலையை உருவாக்க வேண்டியது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, உள்நாட்டு சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் உள்ளன.
மேலும், உள்நாட்டு வழக்கறிஞர்களுடனான வெளிநாட்டு வக்கீல்களின் தொடர்பு குறித்து எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இதனால், நம் வழக்கறிஞர்களை அவர்கள் கட்டுப்படுத்தி பினாமி முறையில் நம் சட்டத்தை மறைமுகமாக நடைமுறைப்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.