வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : கர்நாடகாவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கியிருப்பதன் வாயிலாக, பிற்படுத்தப்பட்டோரையும், முஸ்லிம்களையும் பா.ஜ., மோத விடுவதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
'பா.ஜ., இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி' என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்சிகள், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் தான், 1990-ல் வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பா.ஜ., விலக்கி கொண்டதாக, தி.மு.க., கம்யூ., கட்சிகள், இன்றும் பிரசாரம் செய்து வருகின்றன.
பா.ஜ.,வை வீழ்த்த, இட ஒதுக்கீட்டை ஓர் ஆயுதமாக, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இப்போது அதே ஆயுதத்தை, எதிர்க்கட்சிகளை நோக்கி பா.ஜ.,வும் வீச ஆரம்பித்துள்ளது.
![]()
|
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் பலனை தந்தது. 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாத இக்கட்டான நிலை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டது.
வரும் மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எஸ்.சி., பிரிவினருக்கு 15-லிருந்து 17 சதவீதமாகவும்; எஸ்.டி., பிரிவினருக்கு 3லிருந்து, 7 சதவீதமாகவும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.
அது மட்டுல்லாது, முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, லிங்காயத்துகள், ஒக்கலிகா சமூகத்தினருக்கு, தலா 2 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக பா.ஜ., அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக, பிற்படுத்தப்பட்டோரையும், சிறுபான்மையினரையும் மோத விடுவதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஆதாயத்திற்காக இட ஒதுக்கீட்டை வைத்து, பா.ஜ., தன் அரசியல் விளையாட்டை நடத்துவதாக, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் இந்த அரசியலை எதிர்கொள்ளவே, ஏப்., 3-ம் தேதி, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராகவும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராட, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாக, அவரது கட்சியினர் கூறுகின்றனர்.