வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''நாட்டில் சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது,'' என, அகில இந்திய காங்., பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில், அவரது பேட்டி:
அதானியை காப்பாற்றும் முயற்சியாக, பார்லிமென்டை பா.ஜ., முடக்கி உள்ளது. ஒன்றுப்பட்ட எதிர்கட்சிகள், கூட்டு பார்லிமென்ட் குழு விசாரணை கோரியதை, ஆளும் பா.ஜ., கண்டு கொள்ளவில்லை.
'மோடி என்ற ஜாதிப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள்' என, ராகுல் சொல்லவில்லை. இதில், எந்த ஜாதியையும் குறிவைத்து பேசவில்லை. எம்.பி., பதவி தகுதி நீக்கம், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை குறித்து, ராகுலோ, காங்கிரசோ பயந்துவிடப் போவதில்லை. இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, மக்களை சந்தித்தோம். அப்போது விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளை அறிந்தோம். மக்கள் பிரச்னைகளை தொடர்ந்து எழுப்புவோம்..
![]()
|
காந்தி, நேரு, நேதாஜி போன்றவர்களை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் கூறி, ஆங்கிலேய அரசு சிறைத்தண்டனை வழங்கியது. அப்படிப்பட்ட ஆங்கில அரசை, காங்கிரஸ் வென்றெடுத்தது. ஆங்கிலேயரிடம் இருந்து, சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியிருக்கிறது.
முறைகேடு செய்தவர்களை அம்பலப்படுத்திய ராகுலை, பா.ஜ., அரசு குறிவைக்கிறது. இதை, காங்கிரஸ் முறியடித்து வெற்றி பெறும்.
இவ்வாறு, முகுல்வாஸ்னிக் கூறினார்.