தமிழக நிகழ்வுகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மூவருக்கு 20 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர்கள் விக்னேஷ், 20, அலெக்ஸ் பாண்டியன், 23, மணிகண்ட ராஜா, 24, ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் விக்னேஷ், அலெக்ஸ் பாண்டியன், மணிகண்ட ராஜா, பட்டாசு ஆலை தொழிலாளர்கள்.
![]()
|
இவர்கள் மூவரும் கடந்தாண்டு மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிவகாசி மகளிர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் மூன்று பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
அரை சவரன் தோடுக்காக மூதாட்டி அடித்துக் கொலை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த கும்மனுாரைச் சேர்ந்த மூதாட்டி பொன்னியம்மாள், 90, அதே பகுதியில் தன் மகள் ராதா வீட்டில் வசித்து வந்தார்.
இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதி மாரியம்மன் கோவில் அருகே மாந்தோப்பு வழியாக சென்றார்.
அப்போது, 'டூ - வீலரில்' வந்த மர்ம நபர்கள், பொன்னியம்மாளை வழிமறித்து அவரது தலையில் செங்கல், கட்டையால் தாக்கி, காதில் அணிந்திருந்த அரை சவரன் தோடு, 6,000 ரூபாயை பறித்து தப்பினர்.
படுகாயமடைந்த பொன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொள்ளையர்கள், பொன்னியம்மாளின் ஒரு காதில் இருந்த தங்க தோட்டை கழட்ட முடியாததால் காதையே அறுத்து தங்க தோட்டை எடுத்துச் சென்றனர்.
கொலை செய்யப்பட்ட பொன்னியம்மாள், வங்கியில் இருந்த தன் முதியோர் உதவித்தொகை பணம், 6,000 ரூபாயை எடுத்து வரும் போது, மர்ம நபர்கள் நோட்டமிட்டு மூதாட்டியை கொலை செய்துள்ளனர்.
எலக்ட்ரீஷியனுக்கு 20 ஆண்டு
விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி, 36, எலக்ட்ரீசியன். இவர் 2021ல் பதினொன்றாம் வகுப்பு படித்த, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் குருசாமியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. குருசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்வும் நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்
தம்பியை வெட்டிய அண்ணனுக்கு சிறை
திருவாடானை-இடப்பிரச்னையில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்குசிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பாலைக்குடி அருகே வெட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் 40. இவருடைய அண்ணன் ராமநாதன் 55. இருவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் அரிவாளால் வெட்டியதில் சக்திவேல் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2013ல் இச்சம்பவம் நடந்தது.
சக்திவேல் புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் ராமநாதனை கைது செய்தார். இந்த வழக்கு திருவாடானை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்தது. மாஜிஸ்திரேட் பிரசாத் விசாரணை செய்து ராமநாதனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்தார்.
பெண்ணிடம் நகை பறிப்பு
ராமநாதபுரம்,--காவானூரை சேர்ந்தவர்கலா. இவர் ராமேஸ்வரத்தில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்துக்கு வேலைக்கு சென்ற போது காவனூர் முருகன் கோயில் அருகில் டூவீலரில்வந்த இருவர் கலாவை வயலுக்குள் தள்ளிவிட்டு ஒன்றரை பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே நிலப்பிரச்னை காரணமாக கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் திரு மூர்த்தி, 26; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகத்திற்கும் இடையே நிலப்பிரச்னை இருந்த வந்தது.
நேற்று நிலத்திற்கு சென்ற திருமூர்த்தியை இங்கு ஏன் வந்தாய் என கேட்டு, அவரை ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐயப்பன், கிருஷ்ணராஜ், ரங்கநாதன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், ஆறுமுகம் உட்பட நால்வர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மது விற்ற இருவர் கைது
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தா சலம், குப்பநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, சித்தலுார் பகுதியைச் சேர்ந்த ராஜேந் திரன், 48; தே.கோபுராபுரம் சிலம்பரசன், 34, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 13 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பேரையூரில் வாலிபர் கொலை
பேரையூர்--பேரையூரில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த வாலிபர் அழகரை 22, மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பியது.
பேரையூர் கீழத்தெரு பிச்சைகாளி மகன் அழகரும், சகோதரர் சங்கரும் 23, கட்டடத் தொழிலாளிகள். நேற்று மாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்தனர். அழகர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கும்பல் அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த அழகரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் இறந்தார்.
அவரது சகோதரர் சங்கர் தப்பி ஓடினார். மர்ம நபர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து அழகர் வீட்டருகே நிறுத்தி விட்டு கொலையை நிகழ்த்திவிட்டு தப்பினர்.
டி.எஸ்.பி., இலக்கியா தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அழகர், சங்கர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.
மாணவியை கேலி செய்த பேராசிரியர் மீது வழக்கு
மதுரை -மதுரையில் மாணவியை உருவ கேலி செய்த காமராஜ் பல்கலை பேராசிரியர் சண்முகராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மதுரை காமராஜ் பல்கலை வரலாற்றுத்துறையில் படிக்கிறார். அத்துறை பேராசிரியர் சண்முகராஜா மாணவியை அடிக்கடி ஜாதியை குறிப்பிட்டும், அவரது உருவத்தை பார்த்து கேலி செய்தும், வகுப்பறையில் படம் வரைந்தும் உள்ளார். நாகமலை போலீசில் மாணவி அளித்த புகாரின்படி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரபல பாடகர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு
சென்னை--பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவியின், 60 சவரன் நகை திருடு போனது குறித்து, பணிப்பெண் உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது.
![]()
|
சென்னை அபிராமபுரம், மூன்றாவது தெருவில் வசிப்பவர், பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ்; பின்னணி பாடகர்.
இவரது மனைவி தர்ஷனா, நேற்று முன்தினம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த ஆண்டு டிசம்பரில், என் 'லாக்கரில்' 60 சவரன் தங்கம், வைர நகைகளை வைத்திருந்தேன். கடந்த 18ம் தேதி பார்த்த போது, அந்த நகைகளை காணவில்லை. என் வீட்டு லாக்கர், 'நம்பர்' போட்டு திறக்கும் அம்சம் கொண்டது.
ரகசிய எண் கொண்டு லாக்கர் உடைக்கப்படாமல் நகை திருடப்பட்டுள்ளது என தர்ஷனா கூறியுள்ளார்.
போலீசார், இரண்டு தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.
விஜய் யேசுதாஸ் பணி நிமித்தமாக துபாயில் இருப்பதாகவும், அவரையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இவரது வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் மேனகா மற்றும் பெருமாள், சையத் ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'லாக்கர் ரகசிய எண் கொண்டு திறக்கும் வகையில் இருப்பதால், நன்கு தெரிந்தவர்கள் தான் லாக்கர் நம்பரை பயன்படுத்தி நகைகளை திருடியதாக தெரிகிறது; விசாரித்து வருகிறோம்' என்றனர்.
சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்து, அதிகளவில் நகை திருடு போனது. அந்த சலசலப்பு அடங்குவதற்குள், விஜய் யேசுதாஸ் வீட்டிலும் லாக்கரில் இருந்து நகை திருடப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
சிறுமி குறித்து ஆபாச கருத்து பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை
சென்னை-சமூக வலைதளத்தில் சிறுமி குறித்து ஆபாச கருத்து வெளியிட்ட பெண்ணுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி, 38. இவர், சமூக வலைதளத்தில், சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
பின், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஸ்வதர்ஷினி, அந்த பெண்ணின் மகள் குறித்து, சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்டார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், 2018ல் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின், வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விஸ்வதர்ஷினி மீது, 'போக்சோ' மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்செங்கோட்டில் தலைமறைவாகி இருந்தவரை, 2019 ஜூன் 11ல் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
'சிறுமியின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட தனியார் 'டிவி' நிறுவனம் மீது, போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற விஸ்வதர்ஷினி, நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவு செய்தவர்.
இந்திய நிகழ்வுகள்
பிரதமருக்கு எதிராக 'போஸ்டர்' குஜராத்தில் எட்டு பேர் கைது
ஆமதாபாத்-குஜராத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து தலைநகர் புதுடில்லி முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த போஸ்டரை ஒட்டியதாக பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர்.
பதிலுக்கு பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களும், புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து போஸ்டர்களை ஒட்டினர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாதிலும் பல இடங்களில் நேற்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், எட்டு பேரை கைது செய்தனர்.
குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் இசுதான் கட்வி இது குறித்து கூறுகையில், ''போஸ்டர் ஒட்டியதாக எங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.
அம்ரித்பால் நெருங்கிய கூட்டாளி பஞ்சாபில் சுற்றி வளைத்து கைது
புதுடில்லி-காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து வரும் நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில், 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்.
வன்முறை
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து அம்ரித்பால் சிங் வன்முறையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது, அவர் கடந்த 18ல் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியும், அவரது கார் டிரைவருமான ஜோகா சிங் என்பவரை, லுாதியானா அருகே சோனேவால் என்ற இடத்தில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணை
போலீசாரை ஏமாற்ற, தன் மொபைல் போனை ஜோகா சிங்கிடம் கொடுத்து, இருப்பிடத்தை அடிக்கடி மாற்றும்படி அம்ரித்பால் சிங் கூறியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜோகா சிங்கை வைத்து அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் முயற்சியில், பஞ்சாப் போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
முதல்வர் மகளுக்கு கொலை மிரட்டல்காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் பணியில், போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் மகள் சீரத் கவுர் மானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளுக்கு, புதுடில்லி மகளிர் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் முதல் மனைவி இந்தர்பிரீத் கவுர். இவர்களுக்கு பிறந்தவர் தான் சீரத் கவுர் மான். 2015ல், பெற்றோர் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, சீரத் கவுர் மான் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
பினராயி விஜயனின் நிதி முறைகேடு வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்
திருவனந்தபுரம்-நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக பினராயி விஜயன் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
20 லட்சம் ரூபாய்
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இவரது ஆட்சியில் முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
மறைந்த தேசியவாத காங்., தலைவர் உழவூர் விஜயனின் குடும்பத்தினருக்கு, இந்த நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், கொடியேறி பாலகிருஷ்ண னின் பாதுகாப்பு அலுவலர் பிரவீனின் குடும்பத்துக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு ஆளானது.
இது குறித்து, மாநில லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், வழக்கின் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது.
மாறுபட்ட கருத்து
சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், அது வெளியாகாதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் கேரளா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
கேரள லோக் ஆயுக்தா சட்டம், 1999ன் விதிகளின் கீழ், கேபினட் உறுப்பினர் என்ற முறையில், பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுப்பதிலான அடிப்படை பிரச்னையில், நீதிபதிகளான எங்களிடையே மாறுபட்ட கருத்து உள்ளது.
ஆகையால் இந்த வழக்கு, மூன்று நீதிபதி கள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.