கூடலுார்,-கூடலூர் குப்பை கிடங்கில் தினந்தோறும் வெளியேறும் புகையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக தேனி கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்.
அதில் கூறியுள்ளதாவது: கூடலுார் நகராட்சியில் சேகரமாகும் குப்பை பெத்துக்குளம் பகுதியில் கொட்டப்படுகிறது. இங்கு அடிக்கடி தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை 11, 12, 13, 17, 20 ஆகிய வார்டுகளில் பரவுகிறது.
இதனால் நுரையீரல் பாதிப்பு உள்ள பலர் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் மழைக் காலங்களில் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும், கூடலுார் நகராட்சிக்கும் பலமுறை புகார் மனு அனுப்பி உள்ளோம்.
குடியிருப்புகளை ஒட்டியுள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வந்த போதிலும் அதற்கான நடவடிக்கை இல்லை.
கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.