சென்னை : ''அ.தி.மு.க., ஆட்சியில்தான், 'டேன்டீ' நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள், அதிக அளவில் வனத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அரசு தேயிலை தோட்டக் கழகமான 'டேன்டீ' நிறுவனத்துக்கு சொந்தமான, 5,317 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை திரும்ப பெறக் கோரி, தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், வால்பாறையில் டேன்டீ நிறுவனத்துக்கு சொந்தமான, 350 குடியிருப்புகளையும், நீலகிரி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளையும், காலி செய்ய வேண்டும் என நிறுவனமும், வனத்துறையும் அறிவித்துள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![]()
|
அமைச்சர் மதிவேந்தன்: தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்கு, 16 ஆயிரத்து 45 ஏக்கர் நிலம், வனத் துறை சார்பில் குத்தகைக்கு வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், அலுவலர்கள், 1,100 பேர் பணிபுரிந்தனர். தற்போது மூன்றாவது தலைமுறையினர் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களின் குழந்தைகள் வேறு பணிக்கு சென்று விட்டதால், தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில், 4710.29 ஏக்கர் நிலம், வனத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி தற்போதுள்ள நிலத்துக்கு, 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், 3,800 தொழிலாளர்கள், 150 அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். எனவே, 5,327.79 ஏக்கர் நிலத்தை, வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவு செய்தோம். ஆனால், 1,480 ஏக்கர் மட்டுமே ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.