சென்னை: பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான ஹரீஸ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மேலாளர் மற்றும் ஏஜென்டுகளாக செயல்பட்ட ராஜா, அய்யப்பன், ரூசோ, ராஜசேகர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். ரூசோ என்பவரிடம் நடந்த விசாரணையில், இந்த மோசடி விவகாரத்தில் பா.ஜ., நிர்வாகியும் நடிகர், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்க்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. ரூசோ, மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஆர்.கே.சுரேஷிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், ரூசோ மற்றும் ராஜசேகர் ஆகியோருடன் ஆர்.கே.சுரேஷ் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர், வெளிநாடு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிகிறது.