'பல் பிடிங்கி அதிகாரி' என அழைக்கப்படும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய பல்வீர் சிங் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: உ.பி. மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பல்வீர் சிங். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வீர் சிங் குடும்பம் ராஜஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது. பல்வீர் சிங் மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். முடித்துள்ளார்.
'இந்தியன் ஆயில்' நிறுவனத்தில் பொறியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2020ல் சிவில் சர்வீசஸ் பயிற்சிக்கு சென்றுள்ளார். தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகரியாக நியமிக்கப்பட்ட பல்வீர் சிங் 10 மாதங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2022 செப். 17ல் அம்பாசமுத்திரத்திற்கு மாற்றப்பட்டார். முழுமையாக தமிழ் தெரியாததால் நிர்வாக விபரங்கள் அறிந்து கொள்ள இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்களை நம்பினார். அந்த நேரத்தில் தான் பல்வீர் சிங்குக்கு 'பல் பிடிங்கி வைத்தியம்' குறித்து கூறியுள்ளனர்.
அதன் பின்னரே அம்பாசமுத்திரம் பகுதியில் சிலருக்கு அந்த 'வைத்தியம்' செய்துள்ளார். அந்த பகுதியில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த ஒருவருக்கும் பல்வீர் சிங்குக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வது தொடர்பாக மோதல் இருந்துள்ளது.
மாலை 6:00 மணிக்கு மேல் அங்கு செல்ல பல்வீர் சிங் அனுமதிக்க மறுத்தார். அந்த மக்கள் பிரதிநிதி இதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடினார். அவர்களை விரட்ட தடியடி செய்யப்பட்டது. இந்த நேரத்தில் 'பல் பிடிங்கி வைத்தியத்தில்' அந்த குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த இருவர் ஆட்பட அது சர்ச்சையாக்கப்பட்டு விட்டது. போராட்டம் வெடித்து பல்வீர் சிங் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
பல்வீர் சிங்குக்கு கூடவே இருந்து 'பல் பிடிங்கி' யோசனை கூறியவர்களில் முக்கியமானவர் அப்பகுதியின் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர். பல்வீர் சிங் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேற்ற பின் அந்த பகுதியில் பெரிய அளவிலான சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழவில்லை.
'பல் பிடிங்கி' விஷயத்தைத் தவிர்த்து நேர்த்தியாகவே செயல்பட்டுள்ளார். தன் போலீஸ் எல்லைக்குள் எந்த பிரச்னையாக இருந்தாலும் தகவல் தெரிந்த அடுத்த சில நிமிடங்களில் அங்கு சென்று பிரச்னையை தீர்த்துள்ளார். போதை பொருள் புழக்கம் கொலை போன்ற குற்றங்கள் நடக்காத பகுதியாக மாற்றியதுடன் குற்ற வழக்கில் ஈடுபட்ட பலரையும் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தார் என பல்வீர் சிங் செயல்பாட்டுக்கு சான்றிதழ் அளிக்க அம்பாசமுத்திரத்தில் பலர் உள்ளனர்.
இளம் போலீஸ் அதிகாரிகளில் சிறப்பாக வரக்கூடியவர் என்பதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க போலீஸ் மேலிடத்தில் மிகவும் தயங்கியுள்ளனர். அரசியல் ரீதியிலான நெருக்கடிக்கு பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு பயிற்சியை இன்னும் ஒரு மாதத்தில் முடித்து எஸ்.பி.யாக பணி உயர்வு பெறக்கூடிய நிலையில் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார்.
தமிழக காவல் துறை வரலாற்றில் எந்த இளம் போலீஸ் அதிகாரியும் இப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக்கப்பட்டதில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.