மதுரை: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் துாத்துக்குடியில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாட்டையொட்டி நாளை பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க பரிசீலிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு துாத்துக்குடி அபிராமி மகாலில் இன்று (ஏப்.,1) துவங்குகிறது. துறவிகள், ஆதினங்கள் ஆசி வழங்குகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்.,2 ல் டூவிபுரத்தில் ஊர்வலம் துவங்கி, சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடையும். அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம்.
துாத்துக்குடி மத்திய பாகம் போலீசார், 'ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
மார்ச் 27 ல் தனி நீதிபதி, 'ஏப்.,1 ல் மகாலில் உள்ளரங்க கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என மனுதாரர் தரப்பில் போலீசாரிடம் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். போலீசார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். அந்த உத்தரவில் மாற்றம் செய்து நாளை (ஏப்.,2) சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாண்டில் பொதுக்கூட்டம் நடத்த, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். தமிழக அரசு தரப்பு: அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் ரகசிய தகவலில் உள்ளது. நீதிபதி: சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாண்டிற்கு பதிலாக மாற்று இடத்தில் ஏப்.,2 ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனுதாரர் தரப்பில் போலீசாரிடம் மனு அளிக்க வேண்டும். அதை போலீசார் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.