மதுரை: கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து வேளாண் கிராமத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம விவசாயிகளுக்கு இலவச பண்ணை குட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
2021 - 22 ல் ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும் கிராமங்களில் இருந்து கலைஞரின் திட்டத்திற்கான கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. அடுத்தடுத்து இரண்டாண்டு திட்டங்களுக்கு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குழுவாக இணைந்தால் ஆழ்துளை கிணறு அமைத்தல், சோலார் வேலி அமைத்தல் போன்ற பணிகள் இலவசமாக செய்யப்படுகின்றன. அதுபோல 40 சென்ட் பரப்பளவிற்கு பள்ளம் தோண்டி பண்ணை குட்டை அமைத்து தரப்படுகிறது.
மழைநீர் வெளியே செல்லாமல் நிலத்திற்குள்ளேயே செல்லும் வகையில் பண்ணை குட்டை அமைக்கப்படுகிறது. நீர் இருப்பைப் பொறுத்து மீன்வளர்க்கவும் செய்யலாம். மீன்வளர்ப்பு துறையின் கீழ் இதற்கு மானியம் உண்டு. திட்டம் நல்லதாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பஞ்சாயத்து யூனியன் நிதியின் கீழ் நுாறு நாள் வேலைதிட்ட பணியாளர்களை வைத்தும் பண்ணைகுட்டை இலவசமாக அமைக்கலாம். இயந்திரத்தின் மூலம் ஒரு கனமீட்டர் மண் அள்ளுவதற்கு ரூ.53 கட்டணம், மனிதர்கள் அள்ளினால் ரூ.350 கட்டணம். வேளாண் பொறியியல் துறையின் இயந்திரம் மூலம் 3 முதல் 4 நாட்களில் 40 சென்ட் பரப்பளவில் பண்ணை குட்டை அமைக்க ரூ.1.40 லட்சம் மானியமாக ஒதுக்கப்படுகிறது.
அதே அளவு பண்ணை குட்டை அமைப்பதற்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் செய்து முடிக்க குறைந்தது ரூ.5 லட்சம் வரை செலவாகும். ரூ.1.40 லட்சம் மானியத்திற்குள் பண்ணை குட்டை அமைக்க நினைத்தால் சிறிய பள்ளம் தோண்டியது போலிருக்கும். எனவே கலைஞரின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட கிராமம் மட்டுமின்றி விருப்பமுள்ள விவசாயிகளும் பயன்பெறுமாறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அல்லது 100 நாள் வேலைத்திட்டத்தில் இயந்திரத்தின் மூலம் அதே அளவு நீள அகலத்தில் பண்ணை குட்டை இலவசமாக அமைத்துத்தர வேண்டும் என்றனர்.