மாட்ரிட்: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட்டை எதிர்கொண்டார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சிந்து 11-12 என பின்தங்கினார்.
பின் சுதாரித்துக் கொண்ட சிந்து முதல் செட்டை 21-14 என கைப்பற்றினார். இரண்டாவது செட் துவக்கத்தில் மியா ஆதிக்கம் செலுத்தினார். சிந்து 11-15 என தடுமாறினார். அடுத்து தொடர்ந்து 'கேம்களை' எடுத்த சிந்து முடிவில் 21-17 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-14, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டு சிந்து பங்கேற்கவுள்ள முதல் அரையிறுதி இது.
ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இத்தொடரின் 'நம்பர்-1' வீரர் கென்டா நிஷிமோட்டாவுடன் மோதினார். முதல் செட்டில் போராடிய ஸ்ரீகாந்த் 18-21 என இழந்தார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் சொதப்பிய ஸ்ரீகாந்த் 15-21 என கோட்டை விட்டார். முடிவில் ஸ்ரீகாந்த் 18-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.