பெண்கள் அனைத்து துறையிலும் கால்பதித்துச் சாதித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள். டிராக்டர் முதல் விமானம் வரை பெண்கள் இயக்காத வாகனங்களே கிடையாது என்றே சொல்லலாம். இந்த வரிசையில் மிக இளம் வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்று, தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். கோவையைச் சேர்ந்த ஷர்மிளா.
கோவை மாவட்டம் வடவெள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. மருந்தியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று, தனது தந்தை ஓட்டி வந்த ஆட்டோவை இயக்கி வந்தார். இவர் ஆட்டோ இயக்கும் ஆர்வத்தைப் பார்த்த ஷர்மிளாவின் தந்தை மகேஷ், கனரக வாகனத்தை இயக்க உற்சாகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் முறையான பயிற்சி பெற்று தற்போது தனியார் பேருந்தை இயக்கி வருகிறார்.
தனியார் பேருந்து இயக்குவது குறித்து ஷர்மிளா கூறுகையில், சிலிண்டர் பொருத்திய ஆட்டோவை இயக்கி வரும் தனது தந்தை தான் உற்சாகப்படுத்தினார் என்றும், 7ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வாகனம் இயக்குவதற்கான ஆர்வம் வந்துவிட்டதாகவும், முறையான பயிற்சி பெற்றுக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனது தந்தைக்கு உதவியாக ஆட்டோவை ஓட்டி வந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தான் கனரக வாகன உரிமம் வாங்க தந்தை தான் காரணம் என்றும், 'நீ சாதிக்கணுமுனு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு, கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவருனு பெருமையா சொல்லிக்குவன்'என்று தந்தை சொல்லியதாக அவர் சொல்லும் போது, கண்களில் அவ்வளவு ஆனந்தம் விளையாடியதை பார்க்க முடிந்தது. ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசினாலும் காக்கிச்சட்டையை போட்டபிறகு காலரை தூக்கிவிட்டு, தன்னால் அனைத்தும் சாதிக்க முடியும் எனத் தைரியத்துடன் கூடிய கர்வமாகக் கூறுகையில், அவர் நம்பிக்கையைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.
காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் இளைஞர்கள் முதல் வயதான மூதாட்டி வரை ஷர்மிளா பேருந்து இயக்குவதைப் பார்த்து வாழ்த்தி விட்டும், அவருடன் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். சாதிக்க ஆண், பெண் முக்கியமில்லை. ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு ஷர்மிளா உதாரணம் ஆகும். படித்து விட்டு ஐடி, மருத்துவம், அரசு வேலை எனப் பல துறைகளுக்குச் செல்ல துடிக்கும் இளம்பெண்களுக்கு முன்மாதிரியாகவும், பெண்கள் நினைத்தால் அனைத்தும் சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் இந்த ஷர்மிளா.
வாடி ராசத்தி...என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இளம்பெண்களின் முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாய் மிளிருகிறார் இந்த இளம் ஓட்டுநர் ஷர்மிளா.
பெண்கள் அனைத்து துறையிலும் கால்பதித்துச் சாதித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள். டிராக்டர் முதல் விமானம் வரை பெண்கள் இயக்காத வாகனங்களே கிடையாது என்றே
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement